தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 சாமுவேல் 16:1

Notes

No Verse Added

2 சாமுவேல் 16:1

1
தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.
2
ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
3
அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.
4
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
5
தாவீது ராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
6
சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
7
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
8
சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
9
அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
10
அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
12
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
13
அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
14
ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
15
அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
16
அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
17
அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதே போனது என்ன என்று கேட்டான்.
18
அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
19
இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.
20
அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
21
அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
22
அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.
23
அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
×

Alert

×

tamil Letters Keypad References